தாய்மொழிப் பற்று இல்லாதவர்கள் தமிழர்கள் மட்டுமா?
தனது தாய்மொழி மேல் பற்று இல்லாத ஒரு இனமாகத் தமிழ் இனத்தை மட்டும் சுட்டும் வழக்கம் உள்ளது. ஏதோ தமிழர்கள் மட்டும் ஆங்கில மோகத்தில் இருப்பது போலவும், கன்னடரும், மலையாளியும், தெலுங்கரும் மொழிப்பற்று மிக்கவர்கள் போலவும் நமக்குச் சொல்லப்பட்டு வருகிறது.
கொச்சியில் ராஜகிரி கல்லூரியில் படிக்கும் எனது மகளின் 'பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு'க்கு (PTM) கடந்த செப். 19-ஆம் தேதி போகும் வரை இதை உண்மை என்றுதான் நானும் நம்பியிருந்தேன். தனது வகுப்புத் தோழிகளையும் தோழர்களையும் எனது மகள் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். கல்லூரியில் சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே எனது மகள் அவர்களிடம் சரளமாக மலையாளம் பேசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
அவள் பேசுவது சரியான மலையாளம்தானா என்று சந்தேகம் வர, அவள் வகுப்புத் தோழனிடம், இவள் பேசும் மலையாளம் சரியா என்று கேட்டேன். அவனும் சரி என்று ஆமோதித்ததோடு, கூடிய விரைவில் இன்னும் சரளமாகப் பேசிவிடுவாள் என்றான்.
அவளது நெருங்கிய தோழி அனகாவிடம் பேசும்போது, ஓய்வு நேரத்தில் தமிழினிக்கு மலையாளம் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்குமாறு வேண்டினேன். பேருந்தில், கடைப்பெயர்களில் உள்ள மலையாள எழுத்துகளை வாசிக்க உதவும் என்று. அதற்கு அவள் சொன்ன பதில்தான் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.
இங்கு தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் சொல்வது போலவே, இவளும் சொன்னாள்.
"அங்கிள், நான் இங்கிலீஷ் மீடியத்தில் படித்தேன். எனக்கே மலையாளம் அவ்வளவாக எழுத, வாசிக்கத் தெரியாது."
இந்தியத் துணைக்கண்டத்திலேயே படிப்பறிவு அதிகமுள்ள நிலம் என்றும், செய்தித்தாள் வாசிக்காத பெண்களே அங்கு இல்லை என்றும், நடிகர் மம்மூட்டி முதல் அவர்கள் முதலமைச்சர்கள் வரை எழுத்தாளர்களை மிகவும் மரியாதையுடன் பார்ப்பார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட கேரளத்தில் இருந்து இப்படி ஒரு குரல் கேட்டது வருத்தமாக இருந்தது.
ஆம், அவள் 8-ஆம் வகுப்பு வரை மட்டும்தான் மலையாளம் படித்தாளாம். அதன் பிறகு இந்தி படித்துள்ளாள். இந்தி என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, அனைத்து தேசிய இனங்களுக்கும் அவர்களது மொழி உரிமைகளுக்கும் கேடுதான்.
ஆக, மொழிப்பற்றும் இனப்பற்றும் இல்லாமல் இருப்பது தமிழர்களுக்கு மட்டுமான சிக்கல் இல்லை என்ற உண்மை புரிந்தது. மற்ற எல்லா தேசிய இனங்களைப் போலத்தான் நாமும் இருக்கிறோம். இருந்த போதும், இதை காரணம் காட்டி, நமது அடுத்த தலைமுறையினரிடம் மொழி குறித்த விழிப்புணர்வு இல்லாததை நியாயப்படுத்திவிட முடியாது. தமிழ் தெரியாது என்று சொல்வதை அவமானமாகக் கருதும் நிலை நமக்கு வர வேண்டும் தான்.
ஒரே சிக்கலை, ஒரே அபாயத்தை எதிர்நோக்கி இருக்கும் மக்கள் கூட்டம்தான் நாம் - தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் - அனைவரும். நம் அண்டை தேசிய இனங்களோடு கைகோர்த்து இந்த சிக்கல்களை எதிர்கொள்வது தான் நன்மை பயக்குமே அன்றி, நாம் ஒருவரை ஒருவர் இனவாதம் பேசி, வெறுப்பை விதைப்பது இந்தியை, துணைக்கண்டம் எங்கும் திணிக்க நினைப்பவர்களுக்கே சாதகமாக முடியும்.
ஒரே நாடு கோட்பாடு, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் மாற்றும்.
'அமைதிப்படை' படத்தில் வரும் ஒரு வசனம்தான் நினைவிற்கு வருகிறது.
"அட ஏம்பா, சண்டை போடுறீங்க. ஒத்துமையா இருங்க பா."
மணிவண்ணன் பதில்:
"அதுக்காக அவனவன் உரிமையை எப்படீங்கணா விட்டுக் கொடுக்க முடியும்?"
ஆம், ஒற்றுமை என்ற பெயரில் நமது உரிமைகளை எப்படி விட்டுக்கொடுப்பது?